சென்னையில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் என வைக்கப்பட்ட பலகையை அகற்றிவிட்டு, காலை சிற்றுண்டி திட்டம் எனப் பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதை ஐ.நா சபை முதற்கொண்டு அனைவரும் பாராட்டினர். ஆனால், அந்த திட்டத்தை கேலி செய்யும் விதமாக அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் பேசியிருந்தார். சென்னையில் மட்டும் 1600க்கு மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 358 மையங்களில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் என்று பலகையில் இருந்ததை மறைத்துவிட்டு காலை சிற்றுண்டித் திட்டம் என்று எழுதுகின்றனர்.
குழந்தைகளின் பசியை போக்கும் இந்த மகத்தான திட்டத்தை மழுங்கடிக்கும் வகையில் தி.மு.க அரசு இப்போது காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் அக்ஷயா அமைப்பின் கீழ் காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஆகையால், இந்த காலை உணவுத் திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்ததே தான் அதிமுக ஆட்சியில் தான். உங்களது முகத்துடன் உங்கள் திட்டத்தின் பெயர் பலகையை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. எதற்காக எம்.ஜி.ஆர் புகழை மறைக்க வேண்டும். எம்.ஜி.ஆர் புகைப்படத்தை மறைப்பது என்பது சட்டவிரோதமான செயல். அதனால், அந்த புகைப்படங்கள் அகற்றப்பட்ட அங்கன்வாடி மையங்களில் மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே சென்று எம்.ஜி.ஆர் புகைப்படத்தை வைப்போம்.
எம்.ஜி.ஆர் தொண்டர்களின் கோபத்திற்கு முதலமைச்சர் ஆளாக வேண்டாம். கடந்த 2 ஆண்டுகளில் அ.தி.மு.க கொண்டு வந்த திட்டத்தையே பெயர் மாற்றம் செய்து தமிழக முதல்வர் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த அரசு, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, காவல்துறை என யாருக்கும் மதிப்பு அளிப்பதில்லை. அதிமுக ஆட்சியில் மிடுக்காக இருந்த காவல்துறை இன்று வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. கட்சி ஆட்கள் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மு.க.ஸ்டாலின் அவர்களை ஊக்கப்படுத்துகிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தினோம். ஆனால், அந்த குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தது தி.மு.க வினர் தான். திமுகவிற்கும் கோடநாடு குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.