தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களை ஒதுக்கியது திமுக. ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
குறைந்த எண்ணிக்கையை ஏற்றுக்கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, அதற்குப் பலனாக, 'நாங்கள் விரும்பும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுங்கள்' என ஒற்றைக் கோரிக்கையை மட்டும் வைத்தது. அதனை ஸ்டாலின் ஒப்புக்கொண்ட நிலையில், 6 தொகுதிகளின் பட்டியலைத் தந்து அதில் ஏதேனும் 2 தொகுதிகளை ஒதுக்குங்கள் எனக் கேட்டுக்கொண்டார் ம.ம.க.தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
ஆனால், அவர்கள் தந்த பட்டியலை ஓரங்கட்டிவிட்டு, தி.மு.க. தனது விருப்பத்தின்படி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய 2 தொகுதிகளை ஒதுக்கியதாகவும், அதனையறிந்து அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ம.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் ஜவாஹிருல்லா!
இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், "மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் போட்டியிடுகிறது. பாபநாசம் தொகுதியில் கட்சித்தலைவரான நான் போட்டியிடுகிறேன். திருச்சி மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் பொதுச் செயலாளர் அப்துல்சமது போட்டியிடுகிறார். தமிழகத்தின் சூழலைக் கருத்தில் கொண்டு மாநில உரிமைகளை நிலைநாட்ட ஒரு ஆட்சி மாற்றம் தேவை. தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டிய ஒரு சூழல் உள்ளது. எனவே, இந்த நிலையைக் கருத்தில் கொண்டு இந்தமுறை மட்டும் இரண்டு இடங்களிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளோம்" என்கிறார் ஜவாஹிருல்லா.
இதன்மூலம், 188 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.