ஈரோடு கிழக்கில் கட்சியில் களப்பணி ஆற்ற ஆள் இல்லை என சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கில் வேலை செய்வதற்கு ஆள் இல்லை. களப்பணி ஆற்றுவதற்கும் வாக்காளர்களிடம் செல்வதற்கும் ஆள் இல்லை. ஆனாலும் 10 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்றுள்ளோம் என்றால் மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை. நாம் இன்னும் மாவட்ட தலைமை, தொகுதி தலைமை சரியில்லை அதை மாற்றுங்கள் இதை மாற்றுங்கள் என இதில் தான் நிற்கிறோம். ஒன்றியம், நகரம், பேரூராட்சி, கிளை என அந்த இடத்திற்கு செல்லவில்லை. தாமரை போல் மிதந்து கொண்டுள்ளோம். வேர்களைப் போல் இல்லை.
அதனால் யாரையும் நம்பி பயனில்லை. நானே பயணிக்க தொடங்கலாம் என முடிவெடுத்துள்ளேன். நானே வருவேன். நானே பேசுவேன். என்னை நம்புகிறாயா, நான் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளதா வா... நம்பிக்கை இல்லையா போ... வெளியே. இங்கு வென்றவன் தோற்றவனுக்கு வரலாறு உள்ளது. வேடிக்கை பார்த்தவனுக்கு கிடையாது. விமர்சனம் கூட ஒரு வித பாராட்டு தான். நீ யாரோ ஒருவரை பொறாமை பட வைத்திருக்கிறாய். உன்னைப் பார்த்து அதிகமாக விமர்சிப்பவர் எவரோ அவர் உன்னைப் பார்த்து அதிகமாக பயப்படுகிறார்” எனக் கூறினார்.