சமீபகாலமாக சீனா, இலங்கை நாடுகளுக்கு இடையேயான நட்புறவு வலுப்பெற்றுவருகிறது. இது பல்வேறு வகைகளிலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தற்போது இலங்கை, இராமேஸ்வரம் இடையில் உள்ள நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவுகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய இலங்கை அரசு சீனாவிற்கு அனுமதியளித்துள்ளது. இதனால், இந்திய அரசு இலங்கைக்கு அருகில் உள்ள கடற்கரை ஓரங்களில் கடலோர காவல் படை (Border Security Force) தளவாடங்களை அதிக அளவில் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு ஆசிய புவியியல் அரசியலில் இலங்கை, சீனா இடையில் உறவு பலப்பட்டுவருகிறது. இது இந்தியாவிற்கு குறிப்பாக தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு உகந்தது அல்ல.
இலங்கையின் ஹம்பந்தோட்டா, கொழும்பு துறைமுகங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலை உள்ளது. இந்திய பெருங்கடலில் சீனாவின் போர் கப்பல்கள் நிலை கொண்டுள்ளன. இராமேஸ்வரம் அருகில் உள்ள நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவுகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய சீனாவிற்கு இலங்கை அனுமதித்துள்ளது. ஆகவே குமரிமுனையிலிருந்து 300கி.மீ தொலைவுவரை சீனா நெருங்கிவிட்டது.
இதுவரை இந்தியாவின் வடகிழக்கு, வடமேற்கு பகுதிகளில் சீனா மற்றும் பாகிஸ்தான் மூலம் போர்களை சந்தித்தோம். எதிர்காலத்தில் தெற்கே சீனாவின் ஆதிக்கத்தால் கடல் வழியாக பிரச்சினை எழக்கூடிய அபாய நிலை உருவாகலாம். எனவே இந்திய அரசு இலங்கைக்கு அருகில் உள்ள கடற்கரை ஓரங்களில் (Border Security Force) கடலோர காவல் படை தளவாடங்களை அதிக அளவில் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முப்படைகளின் முகங்களும் அமைக்க வேண்டிய கட்டாய நிலையில் இந்தியா உள்ளது என்பதனை மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவனத்தில் கொண்டு விரைந்து செயல்படுத்த வேண்டுமென்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.