Skip to main content

''மக்கள் பிரச்சனைக்கா பேரணி நடத்த துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்... பிரச்சனை ஏற்பட்டால் பொறுப்பேற்பது நீதிபதியா?- சீமான் கேள்வி

Published on 02/10/2022 | Edited on 02/10/2022

 

seeman

 

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் மீண்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. நவம்பர் 6ஆம் தேதி மீண்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதோடு, காவல்துறை அனுமதிக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''என்ன நோக்கத்திற்காக ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துகிறது. ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனைக்காக பேரணி நடத்துகிறதா? தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் அல்லது ஓஎன்ஜிசி கிணறுகளுக்கு மறுபடி அனுமதி கொடுக்கக் கூடாது, காவிரி நதிநீர் உரிமையை தமிழர்களுக்கு முறையாகப் பங்கிட்டு தர வேண்டும் என இதுபோன்ற ஏதாவது ஒரு பிரச்சனைக்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த முயல்கிறதா? பிறகு எதற்கு 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நினைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

 

சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லி காவல்துறை அனுமதி மறுக்கும் பொழுது அதை மீறி அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால், ஒருவேளை விரும்பத்தகாத நிகழ்வு பேரணியில் நிகழ்ந்து விட்டது, ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டது என்றால் பொறுப்பேற்கப் போவது நாட்டை ஆளுகின்ற முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளா? அல்லது பேரணியை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்த நீதிபதிகளா? இத்தனை கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கின்ற முடிவை மீறி நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொல்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதில் தலையிடக்கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு இருக்கிறது. அதை மீறி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்