ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே சட்டம் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் 370 நீக்கம் குறித்து மக்களை சந்தித்து தங்களது நிலைப்பாடு குறித்து விளக்க வேண்டும் என அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் மாநில நிர்வாகிகள் சென்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் எனச்சொல்லப்பட்டது.
அதன்படி செப்டம்பர் 29ந்தேதி மாலை திருவண்ணாமலையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கலந்துகொண்டு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து விளக்கி பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், அரசியல் அமைப்பு சட்டம் 370 நீக்கியதால் ஒட்டு மொத்த காஷ்மீர் மக்களும் அமைதியாகத்தான் உள்ளனர். 15 சதவீகித மக்கள் நேரடியாக எதிர்த்து செயல்படுகிறார்கள், விரைவில் அவர்களும் சகஜ நிலைக்கு வருவார்கள்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைய வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம். அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் பணி உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும். தமிழகத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உள்ளாட்சி தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியும் பெரும்பாலான இடங்களில் போட்டியிடும். சென்ற நாடாளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தலில் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு அதிகமாக கிடைக்கும், வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும். நவம்பர் மாதம் மழை காலம் என்பதால் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதத்துக்கு பதில் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் எங்களது கருத்து என்றார்.