Skip to main content

ஆத்திரப்படாதீர்..! அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்! கி. வீரமணி அறிக்கை

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
k. veeramani

 

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழ்நாட்டில் காவி கட்சிகள் என்னென்ன வெல்லாமோ ‘சித்து’ விளையாட்டுகள் ஆடிப் பார்த்தும் கால் ‘ஊன்ற’ முடியாத ஆற்றாமையால், திராவிடர் இயக்கத்தினரையும், அதன் மூலவேரான தந்தை பெரியார் அவர்களைப்பற்றியும்  சிறுமதி கொண்ட சிலர் சமூக வலைதளங்களில் தங்களின் முகங்களை கழிவு நீரில் கழுவி தங்களுக்கே உரித்தான ஆபாச - அசிங்க - நரகல் நடையில் பேசும் ஒரு கழிசடை வேலையில் இறங்கி வருவதுபற்றி ஆத்திரத்துடன் சில முக்கியத் தோழர்கள் நம் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். 

 

பன்றிக் காய்ச்சல் அவ்வப்போது வருவதில்லையா? அதற்காகப் பன்றிகளோடா கட்டிப் புரள முடியும்?

 

அரசின் காவல்துறை - குறிப்பாக நுண்ணறிவுப் பிரிவு  அதிலும் ‘சைபர் கிரைம்‘ என்ற ஒரு பிரிவு இருக்கிறதே - அது என்ன செய்துகொண்டிருக்கிறது? மதிப்பிற்குரிய தலைவர்களை இழிவுபடுத்தும் கிருமிகள் மீது ஒரு சார்பாக சாயாமல் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவர்களின் இன்றியமையாத கடமையல்லவா! அந்தக் கடமையை அவர்கள் செய்யவேண்டாமா?

 

அந்தத் துறை, சாய்ந்த ‘தராசாக’ மாறினால், மக்களின் தார்மீகக் கோபம் கொதி நிலையை அடையாதா? சில நேரங்களில் எல்லையையும் மீறிவிடாதா?


இதனை நினைவூட்ட வேண்டியது நமது கடமையாகும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் - அதன் வரலாற்றில் -  எத்தனையோ காலிகளை, கூலிகளை, போலிகளைப் பார்த்து வந்திருக்கிறது - காலத்தால் காணாமல் போகக் கூடியவர்கள் அவர்கள். இழிசொற்களைத் தங்களின் கொள்கை வயலுக்கு எருவாக்கி, உலகளாவிய அளவில் வளர்ந்துவரும் இயக்கம் இது.

 

நரிகளின் ஊளைகளால் இது நலிந்துவிடக் கூடிய, நசிந்துவிடக்கூடிய இயக்கமல்ல. நம் பெரும் பணியைத் திசை திருப்ப, மண்டியிடும் - மன்னிப்பு ராஜாக்களால் முடியாது. குருவி கத்தியா கோட்டை குடை சாயும்?

 

குறுக்கு வழியில் விளம்பரம் பெறும் உத்தியாகவும் இருக்கக் கூடும். ஆத்திரப்படும் தோழர்கள் இவற்றை அலட்சியப்படுத்தி, வில்லை எடுத்துள்ள நமக்கு- இலக்கு முக்கியம் என்பதால், இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கவேண்டுமே தவிர, சில்லறைகளின் கூச்சலுக்கெல்லாம் செவி கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது.

 

அதேநேரத்தில் இயக்கத்திற்கு நேரிடையாகத் தொடர்பு இல்லாத இளைஞர்கள் அதே மொழியில் பதிலடி கொடுத்தால், அதற்கு நாம் பொறுப்பல்ல. அவற்றை ஊக்கப்படுத்துவதும் நம் வேலையல்ல - அதை விரும்பவும் மாட்டோம். அதேநேரத்தில் புராணங்களில் உள்ளதை உள்ளபடி வெளியிடுவது எவ்வகையில் குற்றம் என்பது மிக முக்கியமான கேள்வி.

 

அய்யாவையே அசிங்கமாகப் பேசுகிறார்களே என்று இளைஞர்கள் ஆத்திரப்படுவது புரிகிறது - அய்யா என்ற மாபெரும் தலைவரைப் பேசினால் தங்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள் - அற்பர்கள்! அடையட்டும், அற்ப சந்தோஷம்!

 

அருமை இளைஞர்களே, ஆத்திர உணர்ச்சியைப் புறந்தள்ளுங்கள். நம் இலட்சியப்பயணத்தைத் திசை திருப்பும் முயற்சிகளைக் கண்டு ஏமாறவேண்டாம்!


அதேநேரத்தில், தமிழக அரசும், காவல்துறையும் கைகட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது - அவர்களுக்குக் கெட்ட பெயரைத்தான் சம்பாதித்துக் கொடுக்கும்!

 

இன்னும் சில மாதங்களில் இதற்குரிய கடுமையான விலையைக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுவதை தவிர்க்க இயலாததாகிவிடும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்