தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் இன்று (24.05.2024) மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அச்சிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ் ஒன்று வெளியாகி இருந்தது. அதன் முகப்பு பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் உள்ளது போன்று அச்சிடப்பட்டிருந்தது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதழ் வெளியிடப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
மேலும் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன எனத் தகவல் வெளியாகி இருந்தது. திருவள்ளுவர் திருநாள் விழா எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் மக்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''இந்த ஆளுநருக்கு தமிழ்நாட்டு பண்பாடும் தெரியாது, தமிழ்நாட்டின் பழக்கவழக்கமும் தெரியாது, திருவள்ளுவரையும் தெரியாது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரையும் அவமானப்படுத்தும் செயலாகவே இதை நான் பார்க்கிறேன். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்ன திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து இன்றைய தினம் திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடுவது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரையும் அவமானப்படுத்தும் செயலாக நான் பார்க்கிறேன்.
திருவள்ளுவருக்கும் இந்த ஆளுநருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. அவருக்கு திருக்குறளும் தெரியாது. ஏனென்றால் திருக்குறளில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதுவே அவருக்கு புரியாது. அதை ஏற்றுக் கொள்ளாதவர் அவர். வேண்டுமென்றே திட்டமிட்டு பிரதமர் மோடி தொடங்கி அமித்ஷா தொடர்ந்ததை ஆளுநர் இன்று தொடர்ந்து செய்து வருகிறார் என்றுதான் தோன்றுகிறது. கடந்த முறை ஆளுநர் ஒரு கருத்தை சொல்லி இருந்தார். ஜி.யு.போப் திருக்குறளை தவறாக மொழிபெயர்த்துள்ளார் என்று சொன்னார். இவர் திருக்குறளில் தேர்ச்சி பெற்றிருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியா தவறா என்று சொல்ல முடியும். இவருக்கு திருக்குறளில் ஒரு குறள் கூட தெரியாத நிலையிலும் ஜி யு போப் தவறாக திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார் என்று சொல்லும் அளவுக்கு தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த ஆளுநர்'' என்றார்.