மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் அந்தேரி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் லட்கே காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் என அறிவிக்கப்பட்டது.
சிவசேனா தாக்கரே அணியை சேர்ந்த ரமேஷ் லட்கேவின் மனைவி ருதுஜா லட்கே அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதே நேரத்தில் இடைத்தேர்தலில் பாஜக அணியை வெற்றி பெறச் செய்ய சிவசேனா சிண்டே அணி தீவிர முயற்சி எடுத்தது. இடைத்தேர்தலில் சிவசேனாவின் இரு அணிகளிடையே கடுமையான போட்டி நிலவியது. இதனைத் தொடர்ந்து அந்தேரி கிழக்கு தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக் கணிப்புகள் வெளியானது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே இடைத் தேர்தலில் தங்களது வேட்பாளர் வேட்புமனு வாபஸ் பெறுவார் என அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “பாஜக அந்தேரி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளது. பாஜக சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த முர்ஜி படேல் வாபஸ் பெற்றுக்கொள்வார். இல்லையென்றால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
“பாஜகவிற்கு கட்சி தோற்றுவிடும் எனத் தெரிந்துவிட்டது. அவர்கள் எடுத்த கருத்துக் கணிப்புகளில் பாஜக 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கும் என்று தெரிந்துவிட்டது. இதன் காரணமாகவே அந்தேரி கிழக்கு தொகுதியில் வேட்பாளரை வாபஸ் பெற வைத்துள்ளனர்” என பாஜக வேட்பாளரின் வாபஸ் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதன் மூலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் ருதுஜா லட்கே போட்டியின்றி வெற்றி பெறுவார் எனத் தெரிகிறது.