இணையத்தில் மோசமாக விமர்சனம் செய்தீர்கள் என்றால் அதற்கான நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் மோடி20 மற்றும் அம்பேத்கரும் மோடியும் ஆகிய புத்தகங்களின் வெளியிட்டு விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். எல்.முருகன் முன்னிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை புத்தகங்களை வெளியிட முதல்வர் ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய தமிழிசை, “புத்தகத்தைப் படிக்காமல் விமர்சிப்பது தவறு. இணையதள விமர்சகர்கள் விமர்சிக்கும் அளவிற்கு நாங்கள் முட்டாள்கள் அல்ல. தமிழ் மொழி எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் மொழி. ஆனால் அந்த மொழியில் விற்பன்னர்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இணையதளத்தில் எழுதும் வார்த்தைகளைப் பார்த்தால் பார்க்க முடியாது. அதனால் தான் இணையத்தில் எழுதும் எதிராளி சகோதரர்களைக் கேட்கிறேன் முதலில் இந்த புத்தகத்தைப் படியுங்கள். இதைப் போல் சாதனை செய்த பிரதமர் இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்வீர்கள்.
ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அதிலும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் நாகரீகமாக விமர்சனம் செய்யுங்கள். நான் மறுபடியும் சொல்கிறேன். இணையதளத்தில் நீங்கள் மோசமாக விமர்சனம் செய்தீர்கள் என்றால் அதன் பின்பு நீங்களும் எதற்காக இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு நடவடிக்கை இருக்கும்” என்றார்.