Skip to main content

“எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்...” - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

"I have only one regret..." Edappadi Palaniswami said in an interview

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 

 

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி. வேட்பாளருக்கு தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் அனைவருக்கும் நன்றி. ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தில் ஜனநாயகமா பணநாயகமா என பார்க்கும் பொழுது பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் அறிவித்த நாள் முதல் தேர்தல் நடக்கும் நாள் வரை வாக்காளர்களுக்கு தினந்தோறும் திமுகவினர் பண மழை பொழிந்தனர். 30 அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டு 22 மாதத்தில் சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் தண்ணீர் போல் பணத்தை வாரி இறைத்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர். கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். 

 

இந்த தேர்தலில் நடந்த விதி மீறல்கள் குறித்து மத்திய தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் புகார் அளித்தோம். ஆனால் யாரும் திமுக மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த நன்மைகளை சுட்டிக்காட்டி வாக்குகளை கேட்கிறோம். ஆனால் திமுக பணத்தை முதலீடு செய்து தேர்தலை சந்தித்தது. ஜனநாயகத்தின் படி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். தமிழகத்தில் இதற்கு முன் பல இடைத்தேர்தல்கள் நடந்துள்ளது. ஆனால் எந்த இடைத்தேர்தல்களிலும் இம்மாதிரியான முறைகேடுகள் நடந்தது இல்லை. எனக்கு ஒரு வருத்தம் தான். திமுக இத்தனை முறைகேடுகளில் ஈடுபட்டும் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் அதை காட்டாதது வருத்தமளிக்கிறது. நீங்கள் அதை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தால் இப்படிப்பட்ட வெற்றியை அவர்கள் பெற்றிருக்க முடியாது. அனைத்து தேர்தல்களிலும் கட்சிகள் வெற்றி பெறாது. 2024  தேர்தலில் அதிமுக பெரிய வெற்றி பெறும்.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்