ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான செயல்முறை விளக்கமானது வருகின்ற ஜனவரி 16 ஆம் தேதி அனைத்து அரசியல் கட்சிகள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுக கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தில் ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழலில், அண்மையில் மத்திய அரசு ஜி-20 மாநாடு குறித்து ஆலோசிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக கட்சிக்கும் அழைப்பு விடுத்திருந்தது. அதற்காக அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் எழுதியிருந்த கடிதத்திலும் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது. அதனைக் குறிப்பிட்டு எடப்பாடி ஆதரவாளர்கள் மார்தட்டி வந்தனர்.
இந்நிலையில், ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16 ஆம் தேதி அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிப்பதற்கான அழைப்புக் கடிதத்தில் ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்’ என குறிப்பிட்டு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதிமுக வரவு, செலவு கணக்குகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி இருந்தது. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிட்டு அந்த ஆடிட்டிங் ரிப்போர்ட் அனுப்பப்பட்டிருந்தது. அதை ஏற்றுக்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம், அதனை தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.