திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக துரைமுருகன் பதவியேற்றுக்கொண்டு கடந்த செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்தநாளான்று வேலூர் மாவட்டத்துக்கு வருகை தந்தார். அப்படி வந்தவருக்கு இராணிப்பேட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ தலைமையில் மாவட்ட எல்லையில் நின்று வரவேற்பு அளித்தனர்.
அதேபோல் வேலூர் மாவட்டத்துக்கு வந்தபோது, வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு வழங்கினார்கள். அதன்பின் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “60 ஆண்டுக்கும் மேலாக கட்சியில் உழைத்துவருகிறேன், சாதாரண தொண்டனாக இருந்து பொதுச்செயலாளர் என்கிற பெரும் பதவிக்கு வந்துள்ளேன்.
பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் போன்ற பெருந்தலைவர்கள் அமர்ந்த பதவியில் சாதாரண தொண்டனான நானும் அமர்ந்துள்ளேன் என்பது மகிழ்ச்சியே. பழைய வடாற்காடு மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிற முறையில் வடாற்காடு மாவட்ட மக்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்.
நான் இத்தனை ஆண்டுகாலமாக எம்.எல்.ஏவாக, அமைச்சராக இருந்துள்ளேன். எக்காலத்திலும் பத்திரிகை நண்பர்கள் என்னுடன் முரண்பட்டது கிடையாது. என் அணுகுமுறை மென்மையாக இருக்கும். நான் ஆற்றும் பணியை அதே அணுகுமுறையுடன் காணவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகை என்பது உண்மையை வெளிக்கொண்டு வருவது. அதில் நான் குறுக்கே நிற்க விரும்பவில்லை. அதேநேரத்தில் பொய்யை யாராவது பரப்பினாலும் உண்மையை அறிவது உங்கள் உரிமை.” என்று தெரிவித்தார்.
இறுதியாக செய்தியாளர்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் புதிய திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாரே என கேள்வி எழுப்பியபோது, “மாவட்டங்களை பிரிக்கலாம், நிர்வாக வசதிக்காக புதிய பல்கலைகழகங்களை உருவாக்கலாம், என்றும் திருவள்ளுவரை பிரிக்கமுடியாது” என்றார்.