திமுகவில் இருந்த ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் திடீரென டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் இருந்தனர். ஜெ.பி. நட்டாவுடன் சந்திப்பு எதற்கு என்ற கேள்விக்கு, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு லிப்ட் வசதி கேட்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வந்தேன் என்றார் கு.க.செல்வம்.
பின்னர் சென்னை திரும்பிய நிலையில் திடீரென தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாயலம் சென்று திமுகவுக்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் எங்கே அமருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் திமுக எம்எல்ஏக்களுடன் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களோடு அமர்ந்தார். அவரை ''வாங்க... வாங்க...'' என்று திமுக எம்எல்ஏக்கள் சிரித்துக்கொண்டே வரவேற்றனர். ''வந்துவிட்டேன்...'' என்று கு.க.செல்வமும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
பாஜகவுக்கு முழு மனதுடன் வந்துவிட்டாரா, திமுக பாசம் இன்னும் இருக்கிறதா என்று பாஜகவினர் பேச ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில்தான் கு.க.செல்வம் அலுவலக வாசலில் வாஜ்பாய் படம் ஓட்டப்பட்டுள்ளது. கூடவே அண்ணா, கலைஞர் படங்களும் ஒட்டப்பட்டுள்ளது. எம்எல்ஏ பதவிக்கும் ஆபத்து வந்துவிடக்கூடாது, பாஜகவின் நம்பிக்கைக்கும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஜெ.பி.நட்டா, மோடி ஆகியோரிடன் படங்களை ஒட்டாமல், திமுகவினர் மதிப்பு வைத்திருந்த வாஜ்பாய் படத்தை கு.க.செல்வம் ஒட்டியுள்ளார் என்கின்றனர் அந்த பகுதியைச் சேர்ந்த கட்சியினர்.