Published on 17/08/2019 | Edited on 17/08/2019
ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அமமுக ஆலோசனைக்கூட்டம் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று நடைபெற்றது. முக்கிய அமமுக முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தினகரன், அர்ஜூனர், கிருஷ்ணர் குறித்து பேசக்கூடாது என நினைத்தேன். ஆனால் சிலர் பேசுவதால் அது குறித்துபேசுகிறேன். மகாபாரதத்தில் பல சூழ்ச்சிகள் உள்ளன, கடந்த கால தோல்விகளை பற்றி நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் வெற்றி பெறுவோம். நானும் உங்களை போன்று ஒரு தொண்டன்தான். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்னை பொதுச்செயலாளர் என்று சொல்லும் போது கூட யாரையோ சொல்கிறார்கள் என்றுதான் நினைத்துக் கொள்வேன்.
அதன் பின்னர் தான் என்னை சொல்கிறார்கள் என்று நினைப்பேன். அதேபோல் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் வெறும் 7,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருப்பது தனக்கு மட்டுமல்லாமல், எல்லோருக்குமே வியப்பாக உள்ளதாக தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் 10 பூத்களில் அ.ம.மு.க.விற்கு 0 வாக்குகள் தான் கிடைத்துள்ளது என்றும் கூறினார்.மேலும் வருகிற நவம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் சென்னை மாவட்டத்தில் அமமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒன்று பட்டு உழைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் இந்த கூட்டம் இன்றைக்கு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் பேசினார்.