இரண்டு ஆண்டுக்கு முன்பு கட்சி ஆரம்பிப்பிப்பது உறுதி என அறிவித்தார் நடிகர் ரஜினி. அதேபோல் போர் ( தேர்தல் ) வரும்போது களத்தில் இறங்குவேன் என்றும் கூறியிருந்தார். ரஜினி ரசிகர் மன்றம் என்பதை ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்தார். கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்பின் நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் ஓராண்டில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ரஜினி கூறும் அரசியல் கருத்துக்கள் மக்களிடம் எதிர்ப்பும், ஆதரவும் கலந்துக்கட்டி வருகின்றன. ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்கிற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து வருகிறது. அவர்களைவிட ரஜினி ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் எதிர்பார்ப்போடு எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மார்ச் 5ந் தேதி தனது மக்கள் மன்ற மா.செக்களை சந்தித்தார் ரஜினி. ரஜினி அரசியல் கட்சி பற்றி அறிவிக்கப்போகிறார் என தகவல் பரவி, பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை. இங்கே பேசியதை வெளியே சொன்னால் கடும் நடவடிக்கை என எச்சரித்து அனுப்பினார் ரஜினி என்கின்றனர். வெளியே சொல்ல கூடாது எனச்சொல்லும் அளவுக்கு என்னப்பேசினார் என ரஜினிக்கு நெருக்கமான வட்டங்களில் கேட்டபோது, தயங்கி தயங்கி சில விவரங்களை மட்டும் பகிர்ந்துக்கொண்டனர்.
மன்றத்தில் பொறுப்புக்கு வந்தவர்கள் பலர் சரியாக செயல்படவில்லை. சிலர் மட்டுமே சரியாக செயல்படுறீங்க. இப்படியிருந்தால் எப்படி நான் அரசியலில் இறங்குவது. கலைஞர், ஜெயலலிதா எல்லாம் எப்படி உழைத்தார்கள் தெரியுமா, அவுங்க பல சோதனைகளை தாண்டி வந்தப்பிறகு தான் அவுங்களாள முதலமைச்சராக முடிஞ்சது. முதல்வராக திமுக எப்படி உழைக்கறாங்க பாருங்க. அரசியல் என்பது நெருப்பு பள்ளம் அதில் இறங்கனும்ன்னா பார்த்து தான் செய்யனும்.
நான் அரசியலுக்கு வருவதா இருந்தால் மன்றத்தை நம்பி மட்டும் வரமுடியாது. பொதுமக்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் ஆதரவு வேண்டும். நாம கட்சி ஆரம்பிக்கனும்ன்னா வெற்றி பெறனும். என் கண் முன்னாடி இருக்கறது இந்த ஒரு வாய்ப்பு தான். இப்போ நாம் கட்சி தொடங்கினாலும் 20 சதவித ஓட்டு நிச்சயம். 50 ஆண்டுகாலம் கட்சி நடத்தற திமுக, அடுத்து அதிமுகவும் ஒவ்வொரு கட்சியும் 35 சதவித ஓட்டுக்களை வச்சியிருக்காங்க. நம்மகிட்ட 20 சதவித ஓட்டு தான் இருக்கு. அதை வச்சி நாம எப்படி ஜெயிக்க முடியும். நாம ஜெயிக்கனும்ன்னா மக்களிடம் புரட்சி வரனும். தமிழ்நாட்ல திமுக, அதிமுக வேணாம் அப்படிங்கற எண்ணம் மக்களிடம் வரனும். அது மக்கள்கிட்ட வரலன்னு தான் எனக்கு தோணுது. மக்களிடம் அந்த கருத்து வர நாம நீண்ட காலம் உழைக்கனும், அப்படி உழைத்து மக்கள் மனதில் மாற்றம் வந்தால் தான் வெற்றி பெற முடியும். நாம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்றாலும் நான் முதலமைச்சர் கிடையாது, உங்களில் ஒருவர் தான் முதலமைச்சர் எனச்சொல்ல மா.செக்கள் அதெல்லாம் முடியாது. நாம ஜெயிச்சபிறகு நீங்க தான் முதலமைச்சர் எனக்கூறியுள்ளார்கள்.
அதன்பின் தான் நடிக்கும் அடுத்த திரைப்படமான அண்ணாத்த குறித்தும், குடும்பம் குறித்தும் சில வார்த்தைகள் பேசியுள்ளார். மீண்டும் கட்சி குறித்து பேசியவர் நான் சொல்லும் அரசியல் கருத்துக்கள் மக்கள் மத்தியில் எப்படி எதிரொலிக்கிறது என்பதை நானும் கவனித்து தான் வருகிறேன். உங்க செயல்பாடுகளையும் கவனிக்கிறேன். நீங்க சராசரி திமுக, அதிமுக மா.செக்கள் போல் நடந்துக்கறிங்க. அப்படி நடந்துக்கிட்டா நான் கட்சி தொடங்கி புதிய அரசியல் பயணத்தை தொடங்கினால் எப்படி வெற்றிபெற முடியும்?. நீங்க உங்க வேலையை பாருங்க, மக்களிடம், உங்களிடம் மாற்றம் வருதான்னு பார்ப்போம், மாற்றம் வந்தால் கட்சி தொடங்குகிறேன், இல்லைன்னா மன்றம் மன்றமாவே இருக்கட்டும். நாம் மீண்டும் சந்திப்போம், அப்போது விரிவா பேசறன் அப்படின்னு சொன்னார் என்கிறார்கள்.