ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை, நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் நேரில் சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடனான இச்சந்திப்பின்போது கட்சித் தொடங்குவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் சமீபத்தில் குடியுரிமை சட்ட திருத்தும் தொடர்பாக ரஜினி அளித்த பேட்டிக்கு கமல் ஆதரவு அளித்திருந்தார். இதனால் வரும் சட்ட மன்ற தேர்தலில் ரஜினியுடன் கமல் இனைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் 'ரஜினியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே கமல் கட்சியை கூட்டணியில் இணைத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். மேலும் ரஜினியின் அரசியல் கட்சி வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் ஆன்மீக அரசியல் முதன்முதலாக தமிழகம் பார்க்க போகிறது என்றும் அவர் கூறினார். அர்ஜுன் சம்பத்தின் இந்த கருத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.