2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் மீதான தனது கருத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேசிய பழனிசாமி, “இப்போது இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிசாமி துரோகி எனச் சொல்லியுள்ளார். துரோகிக்கு அடையாளம் செந்தில்பாலாஜி தான். எத்தனை கட்சிகளுக்கு சென்றுள்ளார். ஒரு கட்சி இரண்டு கட்சிகளுக்கா சென்று வந்துள்ளார். போகின்ற கட்சிகளுக்கு எல்லாம் துரோகம் இழைத்தவர் செந்தில்பாலாஜி. துரோகத்தை பற்றி அவர் பேசக்கூடாது.
நான் ஒரே இயக்கத்தில் இருக்கின்றேன். 1974ல் அதிமுகவில் இணைந்தேன். இன்று வரை அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கிறேன். இந்த கட்சிக்காக உழைக்கின்றோம். அதனால் உயர்ந்த பொறுப்புகளுக்கு வருகிறோம். ஆனால், துரோகத்தின் மொத்த வடிவமே செந்தில் பாலாஜி தான். திமுகவில் எவ்வளவு சீனியர்கள் இருக்கிறார்கள். வந்து 5 வருடம் கூட ஆகவில்லை. அவர் பேட்டி கொடுக்கிறார். திமுகவில் ஆட்களே இல்லையா. 50 முதல் 60 வருடங்களாக முன் வரிசையில் இருந்தவர்கள், திமுகவிற்காக உழைத்தவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு துரோகம் செய்து குறுக்கு வழியில் அவர்தான் வந்துள்ளார். நாங்கள் யாரும் வரவில்லை” எனக் கூறினார்.