





துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் உசிலம்பட்டி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டபொழுது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு டோக்கன் முறையில் ரூபாய் 500 பணம் விநியோகம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் நாட்டார்மங்கலம் உச்சப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் தேனி பாராளுமன்ற அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஒபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஒவ்வொரு ஊரிலும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஆரத்தி எடுக்க பெண்கள் குழந்தைகள் வயதானவர்கள் என அனைவரும் அழைத்து வரப்பட்டு நீண்ட நேரம் வெயிலில் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
இதற்காக ஒபிஎஸ் மகனுடன் வந்தவர்கள் மகளிர் குழு தலைவிகளிடம் அழைத்து வரப்பட்ட பெண்களின் பெயர் பட்டியலை வாங்கிக் கொண்டு டோக்கன் போன்ற சிறு காகிதத்தை அளித்தனர். பெண்கள் ஒபிஎஸ் மகன் ரவீந்திநாத்திற்கு ஆரத்தி எடுத்து முடித்ததும், அவர் சென்ற பின் பின்னால் வந்த வண்டியில் டோக்கனைக் கொடுத்து மொத்தமாக பணத்தை பெற்று பிரித்துக்கொண்டனர். ஆரத்தி எடுத்த ஒவ்வொரு தட்டிற்கும் ரூ500 பணம் விநியோகம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு கிராமத்திலும் 600 முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுக்க அழைத்து வரப்பட்டனர். தேர்தல் பறக்கும் படையினரோ போலிசாரோ இந்த தேர்தல் விதிமீறலை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதேபோல் சோழவந்தான் பகுதியில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை முதியவர்கள் மற்றும் பெண்களை நீண்ட நேரமாக காத்திருக்க வைத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் பாதியிலயே புறப்பட்டு சென்றனர்.
''ஓபிஎஸ்சின் மகன் போட்டியிடும் தொகுதியில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் பணம் மூட்டை முட்டையாக வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. வருவாய்துறை அதிகாரிகள் பறக்கும்படையினராக இருப்பதால் நடவடிக்கை எடுக்க தயங்குவதோடு அதிகாரிகளின் வாகனங்களிலயே பணத்தை கொண்டு செல்ல உதவுவதாக'' பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.