செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் வருகையின் போது பிரதமருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், ''நாட்டின் பல்வேறு பகுதிகளில், பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்போடு இருக்கக்கூடிய சூழ்நிலை தமிழக அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இன்னும் கேட்கிறேன் அண்ணாமலை போன்றவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வெறுப்பு பிரச்சாரத்தைக் கக்கி, மக்களைப் பிரிக்கின்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கே நல்ல பாதுகாப்பு இருக்கிறது.
அப்படி இருக்கக்கூடிய நிலையில் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க இந்த அரசுக்கு தெரியாதா? பொது மக்களுக்கே தெரியும் அண்ணாமலை சொல்வது எவ்வளவு வேடிக்கையானது என்று. பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் பாருங்கள், சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்புடன் இருக்கிறான். அதை இந்த அரசு உத்தரவாதப்படுத்தியுள்ளது. பிரதமரைப் பாதுகாப்பதற்கு அரசுக்கு தெரியாதா? அதை எங்களுக்கு கற்றுத் தரப் போகிறாரா? இந்த அரசு என்ன எல்.கே.ஜி.யில் இருக்கிறதா? ஐந்தாறு முறை தமிழகத்தை ஆண்ட ஒரு கட்சி அதெல்லாம் அவர் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்'' என்றார்.