ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பணிமனை ஈரோட்டில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
அவர் பேசுகையில், "தி.மு.க. தோழமை கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டாலும், நாங்கள் தி.மு.க. வேட்பாளராக நினைத்துதான் தேர்தல் பணியைத் தொடங்கியிருக்கிறோம். ஜனநாயகத்தில் ஒரு காலத்தில் தேர்தல் நடைமுறை என்பது ஆளும் ஆட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் நடக்கும் தேர்தலாகும். இடைத்தேர்தல் என்பது ஆளும் ஆட்சியின் திட்டங்களை எடை போடும் தேர்தல் என்றே பத்திரிகையாளர்கள் கூறுவார்கள். எதிர்க்கட்சி பலமாக இருக்கும் பட்சத்தில், ஆளும் கட்சி போட்டி போட்டால்தான் வெற்றி பெற முடியும். இந்த இலக்கணத்தை உடைத்து எறிந்து ஜனநாயக அடிப்படையில் தோழமை கட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை அளித்து உள்ளார். தி.மு.க. இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாடு நமது நண்பர்கள் மத்தியில் இருந்தாலும்கூட, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நமது வேட்பாளர் என்ற அடிப்படையில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு பதவிகளை வகித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் தி.மு.க.வுக்கும் பிரிக்க முடியாத ஒரு உறவு இருக்கிறது. அந்த உறவு தந்தை பெரியாரின் குடும்பத்தை சார்ந்தவர் என்பதுதான். எனவே நமது வேட்பாளரை வெற்றி பெற வைப்பதே இலக்கு. மறைந்த திருமகன் ஈவெரா நினைத்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அவரது தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நமக்கு வேட்பாளராக கிடைத்து இருக்கிறார். அவரை வெற்றி பெற வைத்து, திருமகன் நினைத்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற வேண்டும்." என்றார்.
"அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திமுக ஆட்சியில் 10% பணிகள் கூட நடக்கவில்லை எனக் குறை கூறியுள்ளாரே" என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் தமிழகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார். ஆனால், சட்டமன்றத்தில் முதல்வரைப் பற்றி, “இப்படியொரு முதலமைச்சரை நாங்கள் பார்த்ததே இல்லை” என்று பாராட்டி பேசியவர்தான் செங்கோட்டையன். இது சட்டமன்ற குறிப்பிலே இருக்கிறது. இந்த ஆட்சியில் செய்ய வேண்டிய திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லாமல் பஸ்ஸில் செல்லும் திட்டத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த திட்டம் ஈரோட்டிலும் செயல்படுத்தப்படுகிறது. எனவே செங்கோட்டையன் எதிர்க்கட்சியில் இருப்பதால் சொல்லி இருக்கிறாரே தவிர, அவரது நெஞ்சமெல்லாம் தி.மு.க. ஆட்சியைப் பாராட்டிக் கொண்டே இருக்கும்" என்றார்.