மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது அவமானகரமானது என பா.ஜ.க.வை நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்போடு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் மங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேதய்யா காமம் என்பவரின் மனைவி, அவருக்கு வாக்கு சேகரிக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், ‘என் கணவர் இந்து என்பதால், இந்துக்கள் அனைவரும் அவருக்கே வாக்களித்து, அதன்மூலம் இந்து மதத்தையும், இந்து சித்தாந்தத்தையும் காப்பாற்ற உதவவேண்டும். முஸ்லிம்களுக்கு வாக்களித்தால் அவர்கள் இந்துக்களின் அடையாளத்தை அழித்துவிடுவார்கள்’ என மதத்தினை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரித்திருந்தார்.
பொதுவாக தனது ட்விட்டர் பக்கத்தில் #JustAsking ஹேஷ்டேக்குடன் பாஜகவை விமர்சிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்த வீடியோவை பதிவிட்டு, ‘கர்நாடக மாநிலம் தெற்கு மங்களூரு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் மனைவி வாக்கு சேகரிப்பதைப் பார்த்தீர்களா? பாஜகவின் மதவாத அரசியல் அவமானகரமானது. இதுதான் உங்களின் அனைவருக்குமான வளர்ச்சியா? என எழுதியுள்ளார்.