நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு மீட்பு குறித்த மோதல்கள் பாஜகவிற்கு திமுகவிற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.