சென்னை எழும்பூரில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேச வேண்டும். எங்களுடன் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுகுறித்த அறிவிப்பு தேர்தல் சமயத்தில் வெளியிடப்படும். கொங்கு மண்டலம் என்பது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் எஃகு கோட்டை. அங்குள்ள தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தில் ஆதரவு இல்லை என்பதை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு காட்டியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ''திருச்சி மாநாட்டில் அடிப்படை உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுப்பேரவை நடந்தது. அதில் எடப்பாடியையும் அவரைச் சார்ந்த நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்களைத் தவிர மற்றவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் மற்றவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம். ஏனென்றால் அடிப்படை உறுப்பினர்களை எல்லாம் சேர்த்து அவர்கள் நீக்கி உள்ளார்கள். அவர்களை சேர்த்துக் கொள்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'நீங்கள் அவை முன்னவராக இருந்துள்ளீர்கள். ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா இல்லையா?' என்று கேள்வியெழுப்ப, “ஏம்பா ஆளுநருக்கே அதிகாரம் இருக்கா, இல்லையா தெரியலையே? எங்ககிட்ட ஏம்பா கேக்குற. எங்களுக்கும் தெரியல” என சொல்ல அனைவரும் சிரித்தனர்.