சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த சிறுவாச்சூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆட்சியாளர்கள் புதிதாக பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளைப் புறக்கணித்து வருகின்றனர். விவசாயிகள் கிராமங்களில் தான் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். கிராமம் செழிக்க வேண்டும். வளர வேண்டும் என்பதற்கு எந்த திட்டத்தையும் இந்த அரசு கொண்டு வரவில்லை. ஆனால் அதிமுக குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான சிறப்பான திட்டத்தை செயல்படுத்திய அரசு அதிமுக அரசு. விவசாயிகளை பாதுகாக்காத அரசு திமுக அரசு. நான் அறிக்கை வெளியிட்டு விவசாயிகளும் போராட்டம் செய்த பின்புதான் இந்தாண்டு பொங்கலுக்கு திமுக அரசு முழுக் கரும்பு கொடுத்தது.
திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் என்ன நன்மையை பெற்றார்கள். விளம்பரம்தான் மிச்சம். விளம்பரத்திற்கு நூற்றுக்கணக்கான கோடியை செலவழித்துக் கொண்டுள்ளனர். கிராமத்தில் ஏழை எளியோர் அதிகமாக இருக்கின்றனர். விவசாயிகள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்துக்கொண்டு உள்ளனர். அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் மருத்துவர்கள் ஆகவேண்டும். ஆனால் நீட் தேர்வுகளில் நம் மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு அதிகமான மதிப்பெண்களை பெற முடியாத காரணத்தினால் நான் எண்ணிப் பார்த்தேன்.
கிராமப்புறத்தில் இருக்கும் மாணவர்கள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீட்டினை செயல்படுத்தினோம். இதை எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை; மக்கள் கோரிக்கை வைக்கவில்லை; என் மனதில் தோன்றியது. சிந்தனையில் தோன்றியது. அதன் மூலம் இந்த வருடத்தில் 564 பேர் மருத்துவம் பயிலுகின்றனர்” எனக் கூறினார்.