திடீரென்று பிச்சைக்காரனான அதானி பணக்காரன் ஆகிவிட்டார் என சொல்லுவார்களா? என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடற்கரையில் பேனா சின்னம் வைக்கப் போகிறேன் என்கிறார்கள். சுற்றுச்சூழல் பாதிக்கும் அதனால் அதை வைக்கக்கூடாது. இந்துக்களுக்கு விரோதமாக எழுதிய பேனா. அந்த பேனாவிற்கு சின்னமா? முதல்வர் மு.க.ஸ்டாலின், பேனா குனிந்த போது தமிழகம் தலை நிமிர்ந்தது என சொல்லியுள்ளார். திராவிட கட்சிகளின் தலைவர்கள் ஊழல்களை நாம் பார்த்துள்ளோம். அதனால் ஊழலுக்கு பேனா நிமிர வேண்டுமா?.
முதல் இருநாள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் நிறுத்தினர். ஏன் அவர்கள் மீண்டும் விவாதத்தில் பங்கு பெற்றார்கள். ஒரு நிமிடம் யோசனை செய்யுங்கள். ஒன்றுமே இல்லாத விஷயத்தை வைத்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். இப்பொழுது ஏன் கைவிட்டார்கள். காரணம் அதானி பிரச்சனையால் நாட்டுக்கு என்ன பிரச்சனை. 8.7 லட்சம் கோடியை அதானி இழந்தார் என சொல்கிறார்கள். ஆனால் 10 நாளில் மீண்டும் 5 லட்சம் கோடியை பெற்று விட்டார் என சொல்கிறார்கள்.
அவரது பங்கு மதிப்பு 900 ரூபாய்க்கு இறங்கிவிட்டது. இன்றைய அதன் பதிப்பு 1850 ரூபாய். அது மீண்டும் 3000க்கு சென்றுவிடும். திடீரென்று பிச்சைக்காரனான அதானி பணக்காரன் ஆகிவிட்டார் என சொல்லுவார்களா? அதானியின் வங்கிக் கணக்கில் வட்டி மிச்சம் எதுவும் இல்லை. எனவே இது குறித்து வங்கிகள் ஏன் கவலைப்பட வேண்டும். மேலும் எல்.ஐ.சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இதை புரிந்து கொண்ட காங்கிரஸ் தலைமை நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டால் மக்களிடம் கெட்ட பெயர் என்பதன் காரணமாக இந்த பிரச்சனையை விட்டுவிட்டது” எனக் கூறினார்.