தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனால், கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சென்னை தி.நகரில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் எச்.ராஜா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தடுப்பூசி கொடுத்து உயிரை காப்பாற்றிய மோடிக்கு வாய்ப்பு கொடுங்கள் என பொதுமக்களிடம் வாக்கு கேட்டு வருகிறோம். இந்த முறை பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு கொடுப்போம் என பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை 180 கோடி மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உயிரையும் காத்து உணவையும் கொடுக்கும் நல்ல பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. உடனடியாக காவல்துறை ஏன் தடையத்தை அழிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மாநில காவல்துறை மீது சந்தேகம் இருக்கிறது. நீட்டுக்கு எதிராக இருந்தால் கமலாலயத்தில் குண்டு வீசுவார்களா? எதிர் கருத்தே இருக்க கூடாதா? குண்டு வீசி கைதானவரை தூக்கிலிட வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீய சக்திகள் மதகலவரத்தை தூண்டிவிட நினைக்கிறார்கள்.
பொருளாதார ரீதியில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே பள்ளி கூடங்களில் சீருடை பின்பற்றப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு விஸ்வநாதர் கோயில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள குயின்ஸ் லேண்டை இடிக்கும் வரை அங்கேயே அமர்ந்து போராட்டம் செய்ய முடிவு செய்துளேன்" என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.