ஆளுநர் தன்னையே ஆட்சியமைக்க அழைப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மைக்கான 113 தொகுதிகளில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில், 104 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க. ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் தனது ஆதரவினை ம.ஜ.த.விற்கு தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை பாதுகாத்து வரும் நிலையில், யார் ஆட்சியமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் சட்டமன்றத் தலைவரான எடியூரப்பா இன்று காலை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து, தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘கட்சி என்னையே சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. நான் ஆளுநரிடம் கடிதம் அளித்திருக்கிறேன். அவர் நிச்சயம் என்னை ஆட்சியமைக்க அழைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக என்னிடம் உறுதியளித்திருக்கிறார். அவர் தரப்பில் இருந்து எனக்கு கடிதம் வந்ததும் நான் நிச்சயம் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.