தமிழகத்திற்கான 6 மாநிலங்களவை எம்பி பதவிகள் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதை நிலவரப்படி தமிழகத்தில் இருந்து திமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கலாம்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்திருந்தது. அப்போது ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாமகவுக்கு வழங்கப்படும் என்று அதிமுக உறுதி அளித்திருந்தது. பாமகவுக்கு போக மீதமிருக்கும் இரண்டு உறுப்பினர்கள் பதவிக்கு அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதில் ஒரு உறுப்பினர் பதவியை பாஜக கேட்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில் அதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராகவும் உள்ள தமிழ் மகன் உசேன் முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கடந்த 65 ஆண்டுகளாக (1954 முதல் 2019 வரை) பொதுவாழ்க்கையில் இருக்கிறேன். 1972ம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டதில் இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சியில் பல்வேறு பணிகளில் தொடர்ந்து இருந்து வருகிறேன். தற்போது எனக்கு 81 வயதாகிறது. இதுவரை சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதில்லை. இது எனக்கு வேதனையாக இருக்கிறது. எனவே அதிமுகவில் நான் ஆற்றிய பணிகளை எண்ணி பார்த்து, எனத உழைப்பையும், தியாகத்தையும், முதுமையையும் கருதி, இஸ்லாமியனாகிய எனக்கு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் எம்பி பதவியை அதிமுக சார்பில் எனக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேபோல் ஏற்கனவே ராமநாதபுரம் முன்னாள் அதிமுக எம்பி அன்வர் ராஜாவும் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, கோகுல இந்திரா, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன், பொன்னையன் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.