கோப்புப்படம்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, வரும் 27ஆம் தேதி விடுதலையாவதால், அதிமுகவில் மாற்றம் நிகழும் என்று விவாதங்கள் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் சசிகலா இணைய 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதேபோல் எடப்பாடி பழனிசாமியின் கருத்தை ஆதரித்து பெரும்பாலான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் பேசவில்லை. இதனால் தமிழக அரசியல் களத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சசிகலா விடுதலை மற்றும் அதன் பிறகு அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்து சிலர் பேசினர் என்றும், அப்போது குறுக்கிட்டு பேசிய ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரும், ‘யாரும் வேறு யார் பக்கமும் சாய்ந்துவிடாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம்’ எனப் பேசினார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அதிமுகவைச் சேர்ந்த கொங்கு பகுதி எம்எல்ஏ ஒருவர் சசிகலாவை வரவேற்க ரூ.50 லட்சம் மதிப்பில் வெள்ளி வீர வாள் ஒன்றை கொடுக்க தயார் செய்து வருகிறாராம். மேலும் 3 அமைச்சர்கள் சசிகலாவை வரவேற்கவும், அவரிடம் பேசவும் தயாராக உள்ளதாகவும், ஆறு அமைச்சர்கள் இரட்டை மனநிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.