
ஈரோடு, சூரம் பட்டி, டீச்சர்ஸ் காலனி, மோகன் குமாரமங்கலம் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (49). இவரது மனைவி அனுசுயா. ராஜேஷ் கண்ணன் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து கார்களை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில், காருக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமலும், வாடகை சரியாக இல்லாததால் இன்சூரன்ஸ் கட்டவும், மாதக் கடனை கட்டவும் பணம் இல்லாததால் கடந்த சில மாதங்களாக ராஜேஷ் கண்ணன் சிரமப்பட்டு வந்துள்ளார். கடன் வாங்கியவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மன வருத்தத்தில் இருந்தவர் பேசாமல் செத்துவிடலாம் என புலம்பி வந்துள்ளார். அதன்பிறகு அவரது உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(10.3.2025) மதியம் 2 மணி அளவில் வீட்டிலிருந்த ராஜேஷ் கண்ணன் திடீரென படுக்கை அறைக்குச் சென்று தனக்குத்தானே தூக்கு போட்டுக் கொண்டார். வீட்டில் இருந்த அவரது அவரது உறவினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜேஷ் கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர் ஏற்கனவே ராஜேஷ் கண்ணன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.