பிரதமர் நரேந்திர மோடி வரும் 19ம் தேதி சேலம் வருகிறார். சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளை மையப்படுத்தி பரப்புரை செய்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முக்கிய கட்சிகள் கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்ட பேச்சவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
இந்நிலையில், முன்னெப்போதையும் விட இந்த தேர்தலில் தமிழகத்தில் கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்கள் அடிக்கடி தமிழகத்தை வட்டமடித்து வருகின்றனர். குறிப்பாக, கொங்கு மண்டலத்தை குறி வைத்து பரப்புரை உத்திகளை வகுத்துள்ளனர். அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டரை மாதங்களில் தமிழகத்திற்கு நான்கு முறை சுற்றுப்பயணம் வந்துள்ளார்.
இந்நிலையில், வரும் 19ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சேலத்திற்கு வருகை தர உள்ளார். சேலம், நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளை மையப்படுத்தி பா.ஜ.க., கூட்டணி கட்சிகளை ஆதரித்து பேசுகிறார். இதற்காக, சேலம் - நாமக்கல் சாலையில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு பா.ஜ.க. ஏற்பாடு செய்து வருகிறது.
பொதுக்கூட்டம் மதியம் 2 மணியளவில் நடக்கிறது. கூட்டம் நடைபெறும் இடத்தை பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி. அருண் கபிலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சேலத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, கேரளா மாநிலத்திற்கு பிரதமர் செல்ல உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.