கடந்த 1938 ஆண்டு நடந்த மொழிப்போரில், இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறைச்சென்று தியாகிகள் நடராசன், தாளமுத்து உள்ளிட்ட பலரும் பலியாகினர். இவர்களது நினைவை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மொழிப்போரில் தியாகம் செய்த தியாகிகளுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை ஒட்டி சென்னை மூலகொத்தளம் பகுதியில் புதுப்பிக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “மொழிப் போராட்டத்தின் மையமாக திமுக இருந்தது. அன்னை தமிழை அழிக்க இந்தி மொழி திணிக்கப்படுகிறது. தொல் சமூகமான தமிழ் சமூகம் மீது ஆரிய மொழியை நேரடியாக திணிக்க முடியாததால் பல்கலைக்கழகம் மீது திணிக்கின்றனர். ஏன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் வேந்தராக இருக்கக் கூடாது? பல்கலைக்கழகங்களை உருவாக்கி நிர்வகிப்பது மாநிலங்கள் தான். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. நாம் நடத்தி வருவது மொழிக்கு எதிரான போர் அல்ல, பண்பாட்டை காப்பதற்கான போர்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா? அல்லது சமஸ்கிருதத்தை திணிக்கலாமா? என ஒன்றிய அரசு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஒற்றை மதம், ஒற்றை மொழி இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. இதன் மூலமாக, அவர்கள் இந்தியர்களின் ஆதரவாளராக காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.கவை பொறுத்தவரை எதுவுமே குறுகிய செயல்திட்டமாக இருக்காது. நீண்ட கால செயல்திட்டமாக தான் இருக்கும். அவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தின் ஆதரவாளர்கள். நேரடியாக சமஸ்கிருதத்தை எதிர்ப்போம் என்று முதலில் இந்தியை சொல்கிறார்கள். இந்தியை அரியணையில் அமரவைத்த பிறகு சமஸ்கிருதத்தை கையில் எடுப்பார்கள். இது தான் பா.ஜ.கவின் கொள்கை. இன்றைக்கு நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி சாதாரணமாக அடையவில்லை. சமூக நீதிக்காக நூறாண்டு காலமாக உழைத்திருக்கிறோம். நமது திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தி வருகிறது. மருத்துவம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு வான்நோக்கி வளர்ந்து வருகிறது.
இந்த வளர்ச்சியை பல்வேறு ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. இந்த வளர்ச்சியை தடுக்க மாநில சுயாட்சியை சிதைக்கிறார்கள். கூட்டாட்சிக்கு வேட்டு வைக்கிறார்கள். இந்தி மொழியை எல்லா இடத்திலும் ஆதிக்க மனப்பான்மையோடு திணிக்கிறார்கள். நிதியை தடுக்கிறார்கள். மொத்தத்தில், தமிழ்நாட்டின் மீது அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு படையெடுப்பை ஒன்றிய பா.ஜ.க அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல் போராடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் மொழிப் போர் இன்னும் முடியவில்லை, இன்னும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒன்றிய அரசு பணிகளுக்கு இந்தி தெரிய வேண்டும் என்று சொல்வது, பொதிகை தொலைக்காட்சியில் இந்தி மாதம் கொண்டாடப்படுவது, தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட என்ற சொல்லை தவிர்த்துவிட்டு பாடுவது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்புகின்ற கடிதங்களுக்கு எல்லாம் இந்தியில் பதிலளிப்பது என இப்படியெல்லாம் இந்தி நம் மீது திணிக்கப்படுகிறது.
மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் நம் பண்பாடே சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால் நமது அடையாளம் போய்விடும். அடையாளம் போனால், தமிழன் என்று சொல்லிக்கொள்கிற தகுதியை இழந்துவிடுவோம். தமிழன் என்ற தகுதியை இழந்தால் நாம் வாழ்ந்தும் பயனில்லை. எனவே மொழியையும், இனத்தையும், நாட்டையும் காக்க வேண்டும். இந்த மூன்றையும் காக்குக் கழகத்தை காக்க வேண்டும். கழகம் உருவாக்கிய ஆட்சியை காக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்கக்கூடிய ஆபத்தை முறியடிக்க நமது கழகத்தின் மாணவர் அணி சார்பில் தலைநகர் டெல்லியில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்த மாபெரும் போராட்டம் நடத்தப்படும். அன்றைக்கு மொழிப்போரில் ஈடுபட்டு இந்தி பேசாத மாநிலங்களை எல்லாம் காப்பாற்றினோம். இன்றைக்கு கல்வி உரிமை போரில் ஈடுபட்டு இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி உரிமையையும் காக்க கழக மாணவர் அணியினர் டெல்லியில் திரளுவார்கள். வருகின்ற 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில், கொள்கைவாதிகளாக இருக்கக்கூடிய நமக்கும் கொத்தடிமை கூட்டமாக இருக்கும் அதிமுகவுக்கும் நடத்தும் தேர்தல். 2026இல் நாம் தான் வெல்வோம்” என்று பேசினார்.