நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக சென்னை போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கொடியேற்றும் இடத்திற்கு வந்த ஆளுநரை முதல்வர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதோடு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை ஆளுநருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது தலைமை செயலாளர் முருகானந்தம் உடன் இருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளையும் பதக்கங்களையும் வழ்ங்கினார்.
தமிழக அரசின் சார்பில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் சமூக ஆர்வலருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோட்டை அமீர் பதக்கம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவுக்கு தங்கப்பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். ஆதரவற்றவர்களின் உடல்களை மதம் பார்க்காமல் அடக்கம் செய்ததற்காக இப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது தேனியைச் சேர்ந்த முருகவேல் என்பவருக்கு வழங்கப்பட்டது. அவருக்குத் தங்க பதக்கம் மற்றும் 5 லட்சம் ரூபாய்க்கான ரொக்கம் வழங்கப்பட்டது. தமிழக அரசின் அண்ணா பதக்கம் சென்னையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது.
காந்தியடிகள் காவலர் பதக்கங்களை மொத்தம் 5 பேருக்கு வழங்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சின்ன காமன் பதக்கம் பெற்றுக்கொண்டார். விழுப்புரம் சட்ட ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் மகா மார்க்ஸ் பதக்கம் பெற்றார். திருச்சி மாவட்டம் துறையூர் மதுவிலக்கு தலைமை காவலர் கார்த்திக் பதக்கம் பெற்றார். சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் கா. சிவாவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. சேலம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பூமாலைக்கு விருது வழங்கப்பட்டது.
மதுரை மாநகர காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு பெற்றது. இரண்டாம் பரிசு திருப்பூர் மாநகர காவல் துறைக்கும், மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. பதக்கம் பெற்றவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டன.