தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாக பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கின்ற நரேந்திர மோடி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். அடைவார்'' என்று கூறினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மீண்டும் தன்னுடைய பேச்சுக்கு விளக்கமளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது. எனது பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறுகின்றனர். என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்க நான் தயார்'' என்று கூறினார்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற இரண்டாம் கட்ட நடைப்பயணத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் நேற்று தொடங்கினார். இதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அங்கு இருந்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “தமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்றது. நெல்லையில் சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க இளைஞரணி செயலாளர் ஜெகன் படுகொலைச் செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் தி.மு.கவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அதற்குள் பல்லடத்தில் பா.ஜ.க நிர்வாகி மோகன்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த இரண்டுக்கும் திமுக தான் காரணம்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. அரிவாள் மட்டும் தான் சாலையில் இருக்கிறது. காவல்துறையின் லத்தியும், துப்பாக்கியும் குறைவாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இந்தியாவுக்கு பேசுவதற்கு முன்பு தமிழகத்தை பற்றி பேச வேண்டும். மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி பேசினார். அதே போல், சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். வட இந்தியாவில் எப்படி ராகுல் காந்தி உள்ளாரோ அதேபோல் தென்னிந்தியாவில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வரலாறு காணாத தோல்வி அடையும். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சால் எதிர்க்கட்சிகளின் 5 சதவீதம் வாக்குகளை குறைத்துள்ளது.
சீமானிடன் பிடித்ததே அவருடைய துணிச்சலான பேச்சும், தைரியமும் தான். ஆனால், ஒரு பெண் புகார் கொடுத்தவுடன் பயந்துவிட்டு திமுகவும் நாங்களும் பங்காளி என்கிறார். போன வாரம் வரைக்கும் ஒரு சீமான். இப்போது புகார் கொடுத்த பிறகு சீமான் 2.0 ஆக மாறிவிட்டார். இதனால், அவர் மீது வைத்திருந்த மரியாதை குறைந்து விட்டது. அவர் திமுகவை பங்காளி என்று கூறுவார் என்று நினைத்து பார்க்கவில்லை” என்று கூறினார்.