தமிழக சட்டசபையில் நிறைவேறிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, ஆளுநர், முதல்வரை அழைத்து மசோதா குறித்து உரிய விளக்கம் கேட்டு, சுமுகமாக பேசி முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஆளுநர் ரவி, தமிழக முதல்வரை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் மழை வெள்ளம் காரணமாக அந்த சந்திப்பு நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். முதல்வருடன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், அமைச்சர் ரகுபதி ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.
இந்த நிலையில், முதல்வருடன் நடந்த சந்திப்பு சுமுகமாக நடந்துள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கும் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அதன்படி, முதலமைச்சர், ஆளுநரை ஆளுநர் மாளிகையில் இன்று (30.12.2023) மாலை 5.30 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சருடன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, திரு. எஸ். ரகுபதி, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் மாநில தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு பொதுத்துறை செயலாளர் ஆகியோரும் வந்திருந்தனர்.
இந்த சந்திப்பு சுமூகமாக இருந்தது. தமிழ்நாடு ஆளுநரும் முதலமைச்சரும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக் கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஆளுநர், தமிழ்நாட்டு மக்களின் நலனில் தாம் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.ஆளுநர், மாநிலத்தின் மிகப்பெரிய நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்’ என்று தெரிவித்துள்ளது.