
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்ததை தொடர்ந்து தமிழக பாஜக தலைமை மாற்றப்படுவதாக கூறப்பட்டது.
தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு 10.20 மணியளவில் சென்னை வருகை தந்தார். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 35க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அமித்ஷா ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் காலமான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு அமித்ஷா சென்றுள்ளார். இந்நிலையில் தலைவர் போட்டியில் உள்ள நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக அலுவலகம் வந்த போது கமலாலயத்தின் வாசற்படியை தொட்டு வணங்கிவிட்டு சென்றார். மேலும் உற்சாகத்துடன் வந்த அவரை நிர்வாகிகள் வரவேற்றனர். இதனால் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.