
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. அதன் காரணமாக இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியே செல்வது, அதிக நேரம் போனில் உரையாடுவது என்று இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி சிறுமியின் வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளைஞர் தனது நண்பருடன் சென்றிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட இளைஞர் அவரை மதுகுடிக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி மறுத்த நிலையில் தொடர்ந்து கட்டாயப்படுத்தி மது குடிக்கவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிச் சென்றிருக்கிறார். அதனால், பயத்தில் இதுகுறித்து சிறுமி மௌனமாக இருந்துள்ளார்.
இருப்பினும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு கட்டத்தில் தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பெலகாவி புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வந்தது. அதில் இளைஞரின் நண்பரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள இளைஞரை தேடி வருகின்றனர்.