பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறைப் பற்றிய நரேந்திர மோடி பாலிவுட் படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம். ஆனால், பிரதமர் மோடியின் பெயரிலான ஒரு வெப் சீரீஸ் எந்தத் தடையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சீமாந்திராவில் இன்று தேர்தல் தொடங்கியே விட்டது. இந்நிலையில், தேர்தலையொட்டு ஏப்ரல் 11ல் பாலிவுட் இயக்குனர் ஓமங் குமார் இயக்கத்தில், விவேக் ஓபராய் நடித்து வெளியாக இருந்த படம் சர்ச்சைகளைக் கிளப்பியது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறபடியால், படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளி வைக்க உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், படத்தின் ரிலீஸைத் தள்ளி வைக்க முடியாது என்று கூறினாலும், தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஏப்ரல் 10ல் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் முடியும் வரை படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என அறிவித்துவிட்டது. இதனால், இன்று ரிலீஸாக இருந்த படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், “மோடி - ஜர்னி ஆஃப் ஏ காமென் மேன்” என்ற தலைப்பில், வோடஃபோன் நிறுவனத்தின் செல்போன் செயலியான வோடஃபோன் ஃப்ளேயில், ஒரு வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை ஈரோஸ் ஒரிஜினல் நிறுவனம் தயாரித்துள்ளது. இது தேர்தல் சமயம் என்றாலும், பத்து தொடர்களைக் கொண்ட இந்த சீரிஸின் முதல் ஐந்து பாகங்கள் ரிலீஸாகி விட்டன. இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ள உமேஷ் சுக்லா, “இது அரசியல் சார்ந்த படம் கிடையாது. எனக்கு ரொம்பவும் பிடித்த, சிறுவயதில் இருந்தே கஷ்டங்களை அனுபவித்து, மிகப்பெரிய உச்சத்தைத் தொட்ட ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியே பேசி இருக்கிறோம். தொடரின் ரிலீஸ் தேதி என்பது திட்டமிட்டு நடக்கவில்லை. தற்செயலாக நடந்தது. எனக்கு சட்ட விதிகளைப் பற்றியெல்லாம் தெரியாது. புகார் கொடுத்தார்கள் என்றால் பதில் சொல்லத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்து இருக்கிறார்.