தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவ் இன்று (24.09.2020) காலை, சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வந்தார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸின் முன்னணி அமைப்புகள் மற்றும் இதர துறைகள் சார்ந்த தலைவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்கள், சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்தார்.
மேலும், செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டுராவ் வருகை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக் குறியாகியிருக்கிறது. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுகிற உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது.
விவசாயிகள் விளைபொருளை நியாயமான விலையில் சந்தையில் விற்பதற்கான ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் அடித்தளம் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக விவசாயிகள் பெற்றுவந்த உரிமைகள் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் நலனைக் காப்பாற்றுகிற வகையில் மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்துப் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள விவசாயிகள் ஆதரவு போராட்டத்திற்கான செயல் திட்டங்களை வகுப்பதற்காகவும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காகவும் தினேஷ் குண்டுராவ் அவர்களது வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது என்று கூறியுள்ளார்.