ஒவ்வொரு நாளும் நமது வாட்ஸ்-ஆப்புக்கு, சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், தொகுதியில் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களும், நூற்றுக்கணக்கான புகைப்படங்களும் வந்து குவிகின்றன.
தொகுதியின் நல்லது, கெட்டதுகளில் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்வது பழைய நடைமுறைதான் என்றாலும், ‘அதற்காக இப்படியா?’ என்று சொல்லும்படி, தலை கிறுகிறுத்துப்போகும் அளவுக்கு, சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஒரே நாளில் 19 நிகழ்ச்சிகளிலும், மறுநாள் 16 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
20-ஆம் தேதி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் – ராசபட்டி கிளைச் செயலாளர் மனோபாலா இல்ல காதணி விழாவில் ஆரம்பித்து, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு அச்சக சங்க தலைவர் பூலாங்கால் சித்திக்கின் உடல்நல விசாரிப்பு வரை, ஒரு காதணி விழா, ஒரு பூப்புனித நீராட்டு விழா, இரண்டு திருமண நிகழ்ச்சிகள், மூவர் வீட்டில் உடல் நல விசாரிப்பு, 10 வீடுகளில் இறந்தவர்கள் குறித்து துக்கம் விசாரிப்பு, இதுபோக மரியா ஊரணி பராமரிப்பு பணி ஆய்வு, நகராட்சி அலுவலக கட்டுமான பார்வையிடல் என மொத்தம் 19 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
21-ஆம் தேதி, ராஜபாளையம், மீனாட்சிபுரம், கிருஷ்ணன் யாதவ் உடல்நல விசாரிப்பில் ஆரம்பித்து, ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம், சங்கரலிங்கபுரம் பரமசிவம் மறைவுக்கு துக்கம் விசாரித்தது வரை, மொத்தம் 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அதே நாளில், மதுரை விமான நிலையம் சென்று, ராமநாதபுரம் மாவட்டத்தில், கரோனா ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.
தொகுதியில் எந்த நிகழ்வையும் விட்டுவைக்காத ‘வெறித்தனம்’ குறித்து, ராஜவர்மன் எம்.எல்.ஏ.விடமே கேட்டோம். “மக்கள் முன்ன மாதிரி இல்ல. எம்.எல்.ஏ.ன்னா.. தேர்தல் நேரத்துல மட்டும் தலை காட்டினா போதும்கிற காலம் இருந்துச்சு. இப்ப நிலைம ரொம்பவே மாறிருச்சு. முதலமைச்சர் எடப்பாடியாரே, ஆய்வுப்பணி அதுஇதுன்னு தமிழ்நாடு முழுக்க சுற்றி வர்றாரு. அப்படி இருக்கிறப்ப.. ஒரு எம்.எல்.ஏ.வா இருந்துக்கிட்டு, தொகுதில நடக்கிற நல்லது, கெட்டதுல கூட கலந்துக்கலைன்னா எப்படி? தொகுதியே கதின்னு கிடக்கலைன்னா.. மக்கள் மறந்திருவாங்க..” என்று சிரித்தார்.
‘மக்களிடம் செல்; கற்றுக்கொள்..’ என்றார் தோழர் மா சே துங். அறிஞர் அண்ணா அதையே, ‘மக்களை நேசி; சேவை செய்; மக்களோடு சிந்தனை செய்; மக்களுக்குத் தெரிந்தவற்றிலிருந்து தொடங்கு; மக்களிடம் இருப்பதை வைத்துக் கட்டமைப்பு செய்!’ என்றார். எம்.எல்.ஏ. போன்ற மக்கள் பிரதிநிதிகள், மக்களிடம் செல்வதெல்லாம் சரிதான்! அதே நேரத்தில் கற்றுக்கொள்ளவும் வேண்டும்!