தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடினார்.
இதன் பின் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா போன்ற அபாயகரமான கட்டத்திலிருந்து வெளி வந்துள்ள நமது வாழ்க்கையும் அரசியலும் சமூகமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சின்ன கருத்து வேற்றுமை வந்தவுடன் கூறியவர்களைக் கடுமையாக விமர்சிப்பது அவர்கள் மீது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது இணையதளங்களில் மிக கீழ்த்தரமாக விமர்சிப்பது இதையெல்லாம் கைவிட வேண்டும்.
தமிழருக்கு என்று நாகரிகம் இருக்கிறது. அந்த நாகரிகத்தோடு ஒருவரை ஒருவர் திட்டக் கூட செய்வோம். விமர்சனம் கூட செய்து கொள்வோம். தமிழகத்தில் நிலவி வரும் பிரச்சனைகள் நம் அனைவருக்கும் தெரியும். தமிழக சட்டமன்றத்தில் நடந்தது எது சரி எது தவறு என்று விவாதத்திற்குப் போவது சற்று சிரமம். ஆனால், இரண்டு மூன்று விமர்சனங்களைப் பார்த்தேன். சிலர் கடுமையாக ஆளுநரை விமர்சிக்கின்றனர். முதல்வர் யாரையும் விமர்சிக்க வேண்டாம் என சொன்ன பின்பும் மிக கடுமையான வார்த்தைகளைக் கொண்டு உபயோகித்து இணையத்தில் பரவ விடுகிறார்கள் இது கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
தமிழகமென்பதை பொருத்தமட்டில் தமிழ்நாடு என்ற பெயருக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. காமராஜர் காலத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு அறிஞர் அண்ணா காலத்தில் சட்டமாக்கப்பட்டது. நாம் நமது பெருமையையும் உரிமையையும் மரியாதையையும் தமிழர்களாக இருந்து நாம் எப்படி இதைக் காப்பாற்றப் போகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. இணையத்தில் வார்த்தைப் பிரயோகம் மிக மோசமாகி வருகிறது. நான் எதாவது கருத்து சொன்னாலும் தம்பிகள் குதிப்பார்கள். நீ இந்தி இசையா, டாக்டருக்கு உண்மையாகவே படிச்சியா என்று கேட்பார்கள். ஒரு கருத்து சொன்னால் நாகரீகமாக அதை எதிர்கொள்ள வேண்டும். யாராக இருந்தாலும் வரம்பு மீறாமல் விமர்சனம் செய்ய பழகிக்கொள்ள வேண்டும். கருத்து மோதலாக இல்லாமல் கருத்து பரிமாற்றமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.