முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 142- ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். ''பேரறிவாளன் தீர்ப்பு நீதி-சட்டம்-அரசியல்-நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு. மனிதாபிமான மனித உரிமை என்ற அடிப்படையில் வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதேவேளையில் மாநிலத்தினுடைய உரிமையானது இந்த தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ஆளுநர் ஒன்றிய அரசிடம் கேட்கத்தேவையில்லை என்பதை நீதிபதிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைய எந்த எல்லைவரையிலும் சென்று போராட தயங்காதவர் அற்புதம்மாள். அவருக்கு எனது வாழ்த்துக்கள். விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துக்கள். முழுமையான தீர்ப்பு விவரம் வந்த பிறகு சட்டவல்லுனர்களுடன் பேசி, மற்ற 6 பேரை விடுதலை செய்வது குறித்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்'' என்றார்.