ஆட்டுத்தோல் வியாபாரம் செய்து வந்த செய்யாதுரை, அமைச்சர்களின் ஆதரவுக்கரம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் மூலம் தனது எஸ்.பி.கே. நிறுவனம் பல ஆயிரம் கோடி வர்த்தகம் செய்யும் அளவிற்கு குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழமுடி மண்ணார்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் செய்யாதுரை. ஆரம்பகாலகட்டத்தில் ஆட்டுத்தோல் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர், பின்னர் சாலை சீரமைப்பு உள்ளிட்ட சிறு வேலைகளை டெண்டர் எடுத்து செய்து வந்தார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் சென்னையில் புதிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டபோது அதன் சாலைப்பணிகளை செய்து அதன் மூலம் அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார் செய்யாதுரை. இந்த தொடர்புகளின் மூலம் தொடர்ந்து சாலைப்பணிகளுக்கான டெண்டர்களை எடுக்கத்தொடங்கினார். அப்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸின் ஆதரவு அவரது மகன்கள் மூலம் கிடைத்தது. இதன்பின்னர் செய்யாதுரைக்கு ஏறுமுகம்தான். மாநில நெடுஞ்சாலையில் எந்தப்பணிகளூம் இவரது நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனமும் செய்ய முடியாது என்ற நிலை வந்தது. மதுரையில் ஐந்து நட்சத்திர ஓட்டல், சாலை வசதிக்கு தேவையான ஜேசிபி உள்ளிட்ட தளவாடங்களை சொந்தமாக வாங்கி குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றார் செய்யாதுரை. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா வரை தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது எஸ்.பி.கே. நிறுவனம்.
செய்யாதுரையின் கண் அசைவில்தான் தமிழக நெடுஞ்சாலைத்துறை இயங்கியது. 10 ஆண்டுகளுக்கு முன் 5 கோடி வர்த்தகம் செய்து வந்த எஸ்பிகே கன்ஸ்ட்ரக்ஷன் தற்போது ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சாலைகள் மற்றும் சாலைகள் பராமரிப்பு பணிகளில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மட்டும் 1,074 கோடி டெண்டர் மற்றும் பராமரிப்பு பணிகளை எஸ்.பி.கே. நிறுவனம் எடுத்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையின் 5 ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் எஸ்.பி.கேவிடம் உள்ளன.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் விடப்பட்டதில் ஏராளமான முறைகேடுகள், வரி ஏய்ப்பு ஆதாரங்கள் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் இன்று செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமான 30 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. செய்யாதுரையின் கூட்டாளிகள் வீடுகளில் இருந்து மூட்டை மூட்டையாக புத்தம் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாக 120 கோடி சிக்கியுள்ளன. பெட்டி பெட்டியாக 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் ரெய்டில் ஏராளமான பணம், தங்கம், ஆவணங்கள் சிக்கும் என்ற அதிரவைக்கிறது தகவல்.