திமுக எம்.பி.யும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான கனிமொழி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “ஆளுநர் அரசியல்வாதியாக செயல்பட்டுக் கொண்டுள்ளார். வேண்டுமென்றே பிரச்சனைகளை எழுப்ப வேண்டும் என்பதற்காகவே தமிழ்நாட்டு மக்கள் கருத்துகளுக்கு எதிராக அவர்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து கருத்துகளை பேசிக்கொண்டு உள்ளார். இதை நிச்சயம் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மறுபடியும் மறுபடியும் மத்திய அரசிடம் கூட தெரிவித்தாகிவிட்டது. ஆனாலும் இதில் எந்தவித நடவடிக்கையோ யாரும் அழைத்து கண்டிக்கவோ இல்லை என்பது தான் வருத்தமான விஷயம்” எனக் கூறினார்.
திமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தருவதுதான் கலைஞருக்கு நாம் கொடுக்கும் நூற்றாண்டு பரிசாக இருக்கும். இப்பகுதியில் திமுக அல்லது திமுக கூட்டணி வேட்பாளர் தவிர யாரும் வெற்றி பெறக்கூடாது. இன்று திமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறது என்பதை சொல்ல கலைஞர் நூற்றாண்டு கிடைத்திருக்கிறது. இன்று தமிழ்நாடு இந்தியாவில் முன்னேறிய மாநிலத்தில் ஒன்றாக இருக்கிறது என்றால் அதற்கு கலைஞரும் திமுகவும் காரணம். எதிர்க்கட்சியினரின் பொய் செய்திகளை முறியடிக்கும் வகையில் மக்களை சந்தித்து உண்மைகளை எடுத்துக் கூற வேண்டும்” என்றார்.