உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க. உரசல் ஒரு பக்கம் இருக்கும் போது, அ.ம.மு.க. தினகரனுக்கு சின்னம் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி வசமாக செக் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. கட்சியைப் பதிவு செய்த குஷியோடு, உள்ளாட்சித் தேர்தலுக்குத் தனிச் சின்னம் வாங்க முயற்சி செய்தார் தினகரன். காரணம் ஏறத்தாழ 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கு அந்தச் சின்னத்தைக் கட்சியின் பொதுச் சின்னமாக்கி, அ.தி.மு.க.வோடு மோதிப் பார்க்க வேண்டும் என்று அவர் நினைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் எடப்பாடியோ தினகரன் குக்கர் அல்லது பரிசுப்பெட்டி சின்னத்தைத் தான் கேட்பார் என்று தெரிந்து கொண்டு, மாநில தேர்தல் ஆணையத்தின் லிஸ்டில் இந்த இரண்டு சின்னமும் இல்லாதபடி செய்து, தினகரன் தரப்புக்கு எடுத்த எடுப்பிலேயே ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.
![admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/RCEMWw6BygpBGrMGY2joZtyoJgegIJNWYD6ALVacYHs/1576483767/sites/default/files/inline-images/571_0.jpg)
இந்த நிலையில், அ.ம.மு.க.வுக்கு தனியாக ஒரு பொதுச்சின்னத்தை எங்களால் ஒதுக்கமுடியாது. இதற்கு அகில இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தைத்தான் அணுக வேண்டும் என்று 11-ந் தேதி மாலை மாநிலத் தேர்தல் ஆணையமும் தன் பங்கிற்கு ஷாக் கொடுத்தது. இதன்படி தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகி தனிச் சின்னத்தை வாங்க கால அவகாசம் இல்லாததால், அந்த 6 ஆயிரம் உள்ளாட்சிப் பதவிகளுக்கும் சுயேட்சையாகப் போட்டியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் தினகரன். இதில் அவர் ரொம்பவே அப்செட்டில் இருப்பதாக சொல்கின்றனர்.