புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி பதவியேற்றுள்ளார். பாஜகவைச் சேர்ந்த ஏம்பலம் செல்வம் கூட்டணி சார்பில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழிய , பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் வழிமொழிய, 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் செல்வம் வேட்பாளராக போட்டியிட மனுதாக்கல் செய்தார்.
15ஆம் தேதி மதியம் 12 மணிவரை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் இருந்தும், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் ஏம்பலம் செல்வம் சபாநாயகராக தேர்வானது உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதலாவது சட்டமன்றக் கூட்டத்தை நேற்று (16.06.2021) தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் திருக்குறள் வாசித்து தொடங்கிவைத்தார். பின்னர் செல்வம் சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதையடுத்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஏம்பலம் செல்வத்தை சபாநாயகர் இருக்கையில் வந்து அமருமாறு தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் அழைப்பு விடுத்தார். செல்வத்தை அவை முன்னவர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
"புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், 1964ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி மங்கலட்சுமி - ரங்கநாதன் தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், மக்கள் பணியில் அக்கறைகொண்டு செயல்பட்டுவந்துள்ளார். ஏம்பலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக 6 ஆண்டுகள் பதவி வகித்து, சிறந்த கூட்டுறவு சங்கத்திற்கான விருதைப் பெற்றுள்ளார். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவராக மூன்றாண்டுகள் திறம்பட பணியாற்றியுள்ளார். பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பெற்றோர் - ஆசிரியர் சங்கத் தலைவராக பணியாற்றியபோது கல்லூரியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுமக்கள் துயர் துடைக்கும் வகையில் மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார். புதுச்சேரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார். பூப்பந்தாட்ட சங்கத் தலைவர், நெட் பால் சங்கத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்துள்ளார். இத்தகைய சிறப்புமிக்க செல்வம், புதுச்சேரி அரசின் 21வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதற்கு இந்தச் சட்டசபை பெருமைகொள்கிறது.
பேரவைத் தலைவர் பதவியில் அனைவரின் நம்பிக்கையையும் பெற்று, நடுநிலை தவறாமல் தீர்ப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்க்கிறார்கள். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களோடு இணைந்து ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நடந்துகொள்வார் என்று நம்புகிறோம். இத்தகைய சிறப்புமிக்க சட்டப்பேரவையின் நம்பிக்கையையும், மதிப்பையும், மரியாதையும் தான் வகிக்கும் பொறுப்பினையும் மேலும் பெருமைக்குரியதாக மாற்றுவார் என நம்புகிறோம்" என முன்னதாக தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன், புதிய சபாநாயகர் செல்வம் பற்றி குறிப்பிட்டார்.
புதிய சபாநாயகராக பொறுப்பேற்ற ஏம்பலம் செல்வத்தை எம்.எல்.ஏக்கள் அங்காளன், நாஜிம், சாய் சரவணகுமார், நமச்சிவாயம் வைத்தியநாதன், சிவா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.