அரசு பணியிடங்களை காலி செய்ய வேண்டும் என்பதுதான் உலக வங்கியின் முக்கிய அஜெண்டா! வளரும் நாடுகளில் இந்த அஜெண்டாவை ஏற்க வைப்பதன் மூலம்தான் கடன் வழங்கி வருகிறது உலக வங்கி.
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டையும் அதில் அடக்குவதற்கு கடந்த காலங்களில் பல முயற்சிகளை உலக வங்கி எடுத்தது. அதற்கேற்ப, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு, மாநிலங்களில் வலிமையான தலைவர்கள் கோலோச்சியதால் எதிர்ப்புகள் கடுமையாக எதிரொலித்தன. இதனால், உலக வங்கியின் அஜெண்டா நிறைவேறவில்லை.
தற்போது, உலகமெங்கும் கரோனா விவகாரம் அதிகரித்துள்ள நிலையில், வளரும் நாடுகளில் தன் ஆக்டோபஸ் கரங்களை மீண்டும் விரிக்கத் துவங்கியுள்ளது. அந்த வகையில், இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதார இழப்புகளையும் சரிவுகளையும் கணக்குப்போடும் உலக வங்கி மற்றும் அரசாங்கங்களுக்கு கடன் வழங்கும் பல்வேறு நிதி நிறுவனங்கள், மத்திய அரசுக்கு பல பரிந்துரைகளை செய்திருக்கின்றன.
அதில் மிக முக்கியமானது, அரசு பணியிடங்களை காலி செய்வது மற்றும் காலி பணியிடங்களை நிரப்ப தடை விதிப்பது என்பதுதான். இதனடிப்படையில் தமிழக அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது மத்திய அரசு. அதன்படி முதல்கட்டமாக, காலி பணியிடங்களை புதிய நியமனங்கள் மூலம் நிரப்புவதற்கு தடை விதித்துள்ளது எடப்பாடி அரசு. இதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளன.