உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மோடி அரசு ராஜ்யசபா உறுப்பினராய் ஆக்கியிருப்பது இந்திய அளவில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, பாலியல் குற்றச்சாட்டு அவர் மேல் எழுந்தது. அப்புறம் அவர் தலைமையிலான பெஞ்ச்லிருந்து அயோத்தி விவகாரம் தொடர்பாக தீர்ப்பு வந்தது. தற்போது ரிடையர்டுக்குப் பிறகு ராஜ்யசபா பதவி பெற்றிருப்பதும் சர்ச்சையில் உள்ளது.
அதாவது, கடந்த ஆண்டு, தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது, இதே ரஞ்சன் கோகாய், தன் சக நீதிபதிகளான செல்லமேஸ்வர், மதன் பி தாக்கூர், குரியன் ஜோசப் ஆகியோரோடு ஊடகத்தினரை சந்தித்தார். உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசு ஆக்கிரமிக்கப் பார்க்கிறது. தங்களுக்குத் தேவையான நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மூலம் உருவாக்க நினைப்பதாக மோடி அரசைக் கடுமையாக விமர்சித்தார். அப்படிப்பட்டவரை மோடி அரசு நியமன எம்.பி.யாக்கியிருப்பது கேள்வி குறியாக்கியுள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் ரிடையர்டுக்குப் பிறகு கவர்னர் பதவி கிடைத்ததும் சர்ச்சை எழுந்தது. குஜராத் தொடர்பான வழக்குகளில் சதாசிவம் தீர்ப்பளித்திருந்தார். அதேபோல் கோகாய் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படுற ஒரு விவகாரத்தில் தீர்ப்பளித்தவர். அதாவது, 1971-க்குப் பின் இந்தியா வந்த வங்கதேச அகதிகளில் 2 ஆயிரம் பேரை அஸ்ஸாமில் கண்டுபிடித்து, அவங்களுக்கு குடியுரிமை இல்லை என்று வெளியே அனுப்பிய போது, இது தொடர்பான வழக்கை விசாரித்தவர் ரஞ்சன் கோகாய். குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய வேலை அரசுக்குக் கிடையாது. அந்தப் பொறுப்பு குடிமக்களுக்குதான் இருக்கிறது. அதனால் வெளிநாட்டில் இருந்து வந்த ஒவ்வொருவரும் தங்கள் குடியுரிமையை அவர்களே நிரூபிக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார். இது தான், சி.ஏ.ஏ., என்.ஆர்.சியையெல்லாம் மோடி-அமித்ஷா கூட்டணி கொண்டுவர வாய்ப்பாக அமைந்தது. தற்போது நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்பதால், அந்தச் சட்டங்களுக்கு ஆதரவாக வாதங்களை வைக்க கோகாய் பயன்படுவார் என்று பா.ஜ.க. எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது.
நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பை எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து எதிர்ப்பைப் பதிவு செய்ததும் ரஞ்சன் கோகாய் பதவியேற்பில் தான் என்று கூறுகின்றனர்.