Skip to main content

கவுன்சிலர்கள் கடத்தலா? கடலூர் திமுகவில் பரபரப்பு!

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

 Are councilors kidnapped? Cuddalore DMK sensation

 

மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.

 

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். திமுகவின் வேட்பாளர்கள் அறிவிப்பு பல இடங்களில் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், ‘’தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று திமுக தலைமை எச்சரித்திருந்தது. இந்தநிலையில், இதனை மீறும் வகையில், கடலூர் திமுகவில் கடத்தல் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

 

கடலூர் மாநகராட்சியில் உள்ள மொத்த 45 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றியது திமுக. கடலூரின் முதல் பெண் மேயராக கவுன்சிலர் கீதா தேர்வு செய்யப்படுவார் என திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் கடலூர் மேயர் வேட்பாளராக சுந்தரி ராஜாவை அறிவித்தது திமுக தலைமை. சுந்தரி ராஜா அமைச்சர் எம்.ஆர்.கே.வின் தீவிர ஆதரவாளர். அமைச்சரின் சிபாரிசில் சுந்தரிக்கு லக் அடித்திருந்தது. ஆனால், சுந்தரி அறிவிக்கப்பட்டதில் திமுக கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.  அதேபோல், துணை மேயர் பதவியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், தனது கட்சிக்காக திமுக தலைமையிடம் கேட்டிருந்தார். அதை மறுத்து, துணை மேயர் பதவியை விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கி விட்டது திமுக தலைமை. இதனாலும் கடலூர் திமுகவில் அதிருப்திகள் வெடித்தபடி இருந்தன.

 

இந்தநிலையில், கவுன்சிலர் கீதாவின் கணவரும், மாவட்ட பொருளாளருமான குணசேகரன், திமுக கவுன்சிலர்கள் 30 பேரில் 23 பேரை இரவோடு இரவாக பாண்டிச்சேரிக்கு கடத்தி சென்று விட்டார். இந்த சம்பவம் கடலூர் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  இன்று நடக்கும் மேயர் தேர்தலில் சுந்தரி ராஜாவை ஆதரித்து கவுன்சிலர்கள் வாக்களிப்பார்களா? அல்லது கீதா குணசேகரன் போட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டு அவரை ஆதரிப்பார்களா? என்கிற பரபரப்பும் கடலூர் திமுகவில் அதிகரித்துள்ளது.  கடலூரில் நடந்துள்ள இந்த சம்பவத்தை திமுக தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறாராம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

 

 

சார்ந்த செய்திகள்